வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தால் வெடித்தது வன்முறை…. போலீஸ் உள்பட 5 பேர் பலி….

  0
  5
  வடகிழக்கு டெல்லியில் வன்முறை

  வடகிழக்கு டெல்லியில் நேற்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு போலீஸ் உள்பட 5 பேர் பலியாகினர்.

  வடகிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் ஜஃபராபாத் ரயில் நிலையத்தின் கீழே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கூடி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  நடத்தினர். இதற்கு பதிலடியாக குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் அன்று மதியம் மாஜ்பூர் சவுக்கில் கூடினர். அப்போது எதிர் தரப்பிலிருந்து இந்த குழுவை நோக்கி கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து ஒரு சிலர் பதிலுக்கு கற்களால் பதில் தாக்குதல் நடத்தினர். பின் அது வன்முறையாக மாறியது. இதனையடுத்து போலீசார் தலையிட்டு கலவரகாரர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

  வன்முறையில் ஈடுபட்ட கலவரகாரர்கள்

  இந்நிலையில் நேற்றும் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே சுமார் 7 மணி நேரம் மோதல் நடைபெற்றது. வகுப்புவாத கலவரங்கள் மற்றும் பரவலான வன்முறை சம்பவங்களால் ஜஃப்ராபாத் முதல் சந்த் பாக் மற்றும் கரவால் நகர் வரையிலான வடகிழக்கு டெல்லி பகுதி திணறியது. தெருக்களில் தீ பற்றி எரிந்தது, கற்கள், செங்கல்கள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் தெருக்கள் சிதறடிக்கப்பட்டிருந்தது. கல் வீசுதல், துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைத்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவத்தால் ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் ஒரு டி.சி.பி., 24 போலீசார் உள்பட மொத்தம் 60 படுகாயம் அடைந்தனர்.

  துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட வன்முறையாளர்

  இரவு நேரம் வந்த போதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதாகவும், மிகவும் கலவரமான சூழ்நிலை நிலவியதாகவும் தகவல் வெளியானது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியான சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. சி.ஆர்.பி.எப். படை உள்பட பாதுகாப்பு படையினர் நேற்று மாலை கொடி வகுப்பு நடத்தினர். வன்முறை சம்பவத்தில் பலியான போலீஸ்காரர் தலைமை காவலர் ரத்தன் லால் என அடையாளம் தெரிந்தது.