வங்கிகள் இணைப்பால் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமா? குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்….

  0
  1
  நிர்மலா சீதாராமன்

  வங்கிகள் இணைப்பால் தங்களது கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமோ என்ற குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வங்கி துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் வேலைகளை வேகமாக செய்து வருகிறது. முதலில் ஸ்டேட் வங்கியுடன் அதனை துணை வங்கிகளை இணைத்தது. இந்நிலையில் நேற்று 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கிகளாக உருவாக்கியது. இதனையடுத்து நம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைந்தது. முன்பு 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன.

  பொதுத்துறை வங்கிகள் இணைப்பு

  வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் பொதுத் துறை வங்கிகளின் செலவினம் குறையும், நிர்வாகத் திறன் அதிகரிக்கும், வங்கி சேவை விரிவடையும் போன்ற சாதகமான அம்சங்கள் உள்ளன. அதேசமயம் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் இணக்கப்படும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சில அசவுகரியங்கள் ஏற்படும் என கருதுகின்றனர்.

  கனரா வங்கி

  குறிப்பாக, கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமோ என்ற குழப்பத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏனென்றால் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி வேறுபடும். சில வங்கிகளில் வேண்டும் என்றால் ஒரே மாதிரியாக இருக்கலாம். இணைக்கப்படும் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது கணக்கு வைத்துள்ள வங்கி போன்று இருக்குமா அல்லது கூடுதலாக இருக்குமா என்ற சந்தேகத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களின் சந்தேகத்துக்கு உடனடியாக விளக்கம் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.