ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி! இதுதான் இந்த வார பங்கு வர்த்தக நிலவரம்….

    7
    b3

    நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு, சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்படும் என அச்சம், வாகனங்கள் விற்பனையில் தொடர்சரிவு போன்றவை இந்திய பங்குச் சந்தைகளின் சரிவுக்கு காரணமாக அமைந்தது. மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக அமையவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி கண்டது. அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் போன்றவையும் இந்திய சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 

    மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு  ரூ.137.92 லட்சம் கோடியாக சரிந்தது. அதாவது கடந்த 5 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 16ம் தேதி பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.73 லட்சம் கோடியாக இருந்தது.

    இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 649.17 புள்ளிகள் குறைந்து 36,701.16 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு நிப்டி 218.45 புள்ளிகள் சரிந்து 10,829.35 புள்ளிகளில் முடிவுற்றது.