ரிசர்வ் வங்கி தரும் பணத்தை என்ன செய்யலாம்ன்னு இன்னும் முடிவு செய்யல… நிர்மலா சீதாராமன் தகவல்

  0
  1
  நிர்மலா சீதாராமன்

  ரிசர்வ் வங்கி தரும் ரூ.1.76 லட்சம் கோடியை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவு செய்யவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  இந்திய ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதி அதிகமாக உள்ளது. மத்திய அரசுக்கு ரொம்ப நாளா அதன் மீது ஒரு கண்ணு. வருவாய் பற்றாக்குறை இருப்பதால் அந்த உபரிநிதி கிடைத்தால் ரொம்ப நல்லா இருக்கும் என்று மத்திய அரசு யோசனை செய்தது. இதனையடுத்து அந்த உபரி நிதியை தரும்படி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு குடைச்சல் கொடுத்தது. ஆனால் ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.

  இந்திய ரிசர்வ் வங்கி

  ஆனால் மத்திய அரசு அந்த உபரி நிதியை எப்படியேனும் வாங்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி கையிருப்பு அளவு தொடர்பாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள உபரி நிதியை கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசுக்கு கொடுக்கலாம் என ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்தது.

  பிமல் ஜலான் பரிந்துரையை ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழு வாரியம் ஏற்றுக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு டிவிடெண்ட் மற்றும் உபரி நிதியாக மொத்தம் ரூ.1.76 லட்சம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ரிசர்வ் வங்கி கொடுக்கும் இந்த பணத்தை பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள், கடனை குறைக்க அல்லது வருவாய் பற்றாக்குறையை சரிசெய்ய மத்திய அரசு பயன்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

  பணம்

  இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ரிசர்வ் வங்கி தரும் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக முடிவுகள் எடுத்த பிறகு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என தெரிவித்தார்.