ராமர் கோயிலுக்காக மத்திய அரசு ஒரு பைசா கூட செலவு செய்யாது…. அமித் ஷா தகவல்….

  0
  14
  அமித் ஷா

  ராமர் கோயிலுக்காக மத்திய அரசு எந்தவொரு செலவும் செய்யாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

  நீண்ட காலமாக விடை கிடைக்காமல் இழுத்து கொண்டு இருந்த ராம் ஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்குக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் முற்றுப்புள்ளி வைத்தது. சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயில் கட்டி கொள்ள அனுமதி அளித்தது. மேலும் கோயில் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு அறங்காவலர் குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், முஸ்லிம்கள் வேறு இடத்தில் மசூதி கட்டி கொள்வதற்காக அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் கொடுக்க வேண்டும் என அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  உச்ச நீதிமன்றம்

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அறங்காவலர் குழுவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம் பெறுவதாக வந்த தகவல் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமித் ஷா,  இரண்டு விஷயங்களை தெளிவுப்படுத்துகிறேன். அறங்காவலர் குழுவில் பா.ஜ.க. உறுப்பினர்கள் யாரும் இடம் பெற மாட்டார்கள். இந்த திட்டத்துக்காக (ராமர் கோயில் கட்டுமானம்) மத்திய அரசு எந்தவொரு செலவும் செய்யாது என பதில் அளித்தார்.

  ராமர் கோயில் (மாதிரி வரைபடம்)

  விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தியில் ரூ.100 கோடி கூட்டு நிதியில் ராமர் கோயில் கட்ட இருப்பதாக அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் 4 மாதங்களில் விண்ணை தொடும் உயரத்துக்கு ராமர் கோயில் கட்டப்படும் என அமித் ஷா தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.