ராமதாஸ்க்கு 48 மணி நேரம் கெடு கொடுத்த திமுக! 

  0
  9
  ராமதாஸ்

  முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில், டாக்டர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசனுக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

  முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில், டாக்டர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசனுக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

  அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘அசுரன்  – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்’ என்று டிவிட்டரில் பதிவிட்டார். இதற்கு பாமக நிறுவனர்  ராமதாஸ்,  ‘பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!’ என்று பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார்.

  ramadoss stalin

  இதற்கு பதிலடிக் கொடுத்த ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!’ என்று பதிவிட்டு பட்டா ஆவணத்தை இணைத்திருந்தார். 

  இந்நிலையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகக் கூறிய பா.ம .க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் புகார் கூறிய பா.ஜ . . மாநில செயலாளர் ஆர் . சீனிவாசன் ஆகியோருக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சமி நிலம் தொடர்பாக  ட்விட்டர் மற்றும் பேஸ்புக்களில் பதிவிட்டுள்ள பதிவுகளை உடனடியாக அகற்றிவிட்டு, 48 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.  தவறினால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடுகோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர் .எஸ். பாரதி சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.