ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்

  50
  shah

  ரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தற்காக காங். தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

  டெல்லி: ரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தற்காக காங். தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

  பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாகக் கணக்கிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த ஊழல் குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் துவக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசிடம் இருந்து இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

  இந்நிலையில், ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ரபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை, விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்யப்படுகிறது என  உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது.

  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். உண்மை வெற்றி பெற்றுள்ளது. துரதிஷ்டவசமாக நாட்டின் பழமையான கட்சியால் மக்கள் ஏமாற்றப்பட்டனர். ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து ஆதாரங்களையும் வைத்து இருந்தால் அதனை ஏன் அவர்கள்  உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. அவர்களுடைய பி குழு ஏற்கனவே அங்கு இருந்தது.

  நாடாளுமன்றம் நடைபெறும் போது மட்டுமே காங்கிரஸ் ஜே.பி.சி பிரச்சினையை உருவாக்குகிறது. ரபேல் விவகாரத்தில் விவாதத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு நான் சவால் விடுக்கிறேன். ரபேல் விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தற்காக காங். தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.  ரபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது என்றார்.