ராகுல் காந்தி…. இல்லை இல்லை பிரியங்கா காந்தி… காந்தி குடும்பமே வேண்டாம்… மீண்டும் தலைதூக்கும் காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம்

  0
  2
  காங்கிரஸ்

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் ராகுல் காந்தி வரவேண்டும் என ஒரு குழுவும், பிரியங்கா காந்தி வர வேண்டும் என ஒரு குழுவும், காந்தி குடும்பமே வேண்டாம் என ஒரு குழுவும் அந்த கட்சிக்குள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.

  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, கடந்த மே மாதம் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதனையடுத்து அப்போதைக்கு காங்கிரஸ் தலைவர் பதவி விவகாரம் அடங்கியது.

  ராகுல் காந்தி

  இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி விழுந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு மாற்றங்கள் தேவை என அந்த கட்சியினர் குரல் கொடுக்கு தொடங்கினர். புதிய சிந்தனை, புதிய பாணி செயல் மற்றும் புதிய சித்தாந்தம் காங்கிரசுக்கு தேவை என அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான சிந்தியா தெரிவித்தார். மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கட்சி தன்னை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் அது எதிர்க்கட்சியில் இருக்கிறோம் என்பதையும உணர வேண்டும் என தெரிவித்தார்.

  பிரியங்கா காந்தி

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என பூபேஷ் பாகேல், அசோக் கெலாட் ஆகிய காங்கிரஸ் முதல்வர்களும், எல்.கே. அந்தோணி போன்ற மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம் பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தை சேர்ந்த யாருமே வேண்டாம் என புதிதாக ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம் என ஒரு குருப் கூற தொடங்கியுள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் டிவிட்டரில், தொண்டர்களை ஊக்குவிக்கவும், வாக்காளர்களை கவரவும் தலைவருக்கான தேர்தலை நடத்தும்படி காங்கிரஸ் செயல் கமிட்டிக்கு விடுத்த கோரிக்கை மீண்டும் புதுப்பிக்கிறேன். கட்சி தலைவரை மட்டுமல்ல காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 10 ஆயிரம் ஏ.ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி. பிரதிநிதிகள் வாக்களிக்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.