ரஹ்மானியா நைட் கிளப் ! எந்த வயது ஆட்களுக்கும் அனுமதி உண்டு.!

  0
  4
  ரஹ்மானியா நைட் கிளப்

  தமிழ்நாட்டில் அதிக நைட்கிளப்கள் உள்ள நகரம் எது தெரியுமா? என்று கேட்டதும் தலைநகர் சென்னை,பணக்கார கோவை,உறங்கா நகரமான மதுரை இதெல்லாம் உங்கள் ஞாபகத்துக்கு வந்து போனால், வெரி ஸாரி! முத்துநகரான தூத்துக்குடியில் தான் அத்தனை நைட்கிளப்புகள் இயங்குகின்றன.
  அத்தனையும் ஜொள்ளு விட வைக்கும் நைட் கிளப்புகள்தான்.
  உடனே,முத்துநகர் எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட்டு கிளம்புகிறீர்களா?
  கடைசியாக ஒரு உபரித்தகவல்.தூத்துக்குடியில் நைட்கிளப் என்றால் புரோட்டாக் கடை!

  food

  வாங்க முதலில் ரஹ்மானியா நைட்கிளப்புக்கு போவோம்,இது வா.உ.சி மார்கெட் சாலையில் இருக்கிறது.மிகவும் சிறிய உணவகம்.நாற்பது ஆண்டுகளாக இயங்குகிறது. பெயர்தான் நைட் கிளப்,நான்கடி சுவர்,அதற்குமேல்,தகரத்தடுப்புகள்,தலைக்கு மேல் சிமெண்ட் ஓடு வேய்ந்த கடை.சுவரை ஒட்டி பொருத்தப்பட்ட பலகைதான் உணவு மேஜை. அதிகம்போனால் ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம்.

  food

  இங்கே தரப்படும் ஒரு காம்போவுக்கு தூத்துக்குடியில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.அதன் பெயர் ‘ நல்லி செட்’.ஆட்டெலும்புகளைக் கொண்டு செய்யப்பட்ட, கிட்டத்தட்ட வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு குருமாவும் புரோட்டாவும் தருகிறார்கள். லேசாக குருமாவில் புரோட்டாவை ஊறவைத்து சாப்பிட்டால் அப்படி ஒரு ருசி!.உங்களுக்கு இந்த குருமாவில் காரம் இல்லை என்று தோன்றினால் ‘ ஒறப்பு சால்னா’ என்கிற பெயரில் ஒரு சுரீர் கார சால்னா,தருகிறார்கள். அதன் சுவை உங்களை ஆனந்தக் கண்ணீர் விட வைக்கும். இது தவிர பிரைன் ஃபிரை , ஒன்சைட் ஆம்லெட்,நாட்டுக்கோழி, வாட்டா ரொட்டி ,கோதுமை ரொட்டி,இடியாப்பம், மட்டன் சாப்ஸ் என்று இன்னும் பல சுவையான ஐட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.

  எல்லாவற்றுக்கும் சின்ன வெங்காயம் மட்டுமே பயன்படுத்த படுகிறது.வீட்டில் பெண்கள் அன்றன்று அரைத்துத் தரும் மசாலாதான் பயன்படுத்துகிறார்கள்.
  சாப்பிட சற்றுக் குழிவான தட்டில் இலை போட்டு,அதில் புரோட்டா தருவதால்,நன்றாக ஊறவைத்து சாப்பிடலாம்.

  food

  உங்களுக்கு,மைதாமாவு புரோட்டா சாப்பிட மனதில்லை என்றால், கோதுமையில் செய்யப்படும் வாட்டு ரொட்டி,கோதுமை புரோட்டா ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

  இந்த உணவகத்தின் இன்னொரு சிறப்பு,இவர்கள் தரும் நல்லி எலும்பாகட்டும்,மட்டன் சாப்ஸ் ஆகட்டும்,ஏன் நாட்டுக்கோழியே ஆனாலும் கையாலாயே பிய்த்து எடுத்து சாப்பிடலாம்.

  food

  இந்த ஹோட்டலில் நாற்பாதாண்டுகளாக தொடர்ந்து சாப்பிடும் கஸ்டமர்களை ஈர்க்கும் முதல் விசயம் இதுதான்.நாற்பதாண்டுகளாக மாறாத சுவை,அதே தரம்.

  அடுத்த முறை தூத்துக்குடி போனால் ரஹ்மானியாவைத் தவறவிடாதீர்கள்,அங்கே ஜாதிமதம் கடந்து ஜாஸ்மின் நைட்கிளப்,ஆழ்வார் நைட்கிளப் என்று ஏகப்பட்ட நைட்கிளப்கள் இருந்தாலும் நாற்பதாண்டுகளாக நீடித்து நிற்கும் ரஹ்மானியா கொஞ்சம் ஸ்பெஷல்தான் என்பதை நல்லி குருமாவிலோ,ஒறப்பு குருமாவிலோ முக்கிய முதல் புரோட்டா துண்டை வாயில் போட்டதுமே உணர்ந்து கொள்வீர்கள்.