ம.பி. காங்கிரஸ் பதவியை குறிவைக்கும் ஜோதிராதித்யா சிந்தியா….. மெல்ல சிரிக்கும் பா.ஜ…..

  0
  3
  கமல் நாத்- ஜோதிராதித்யா சிந்தியா

  ம.பி. காங்கிரஸ் பதவியை ஜோதிராதித்யா சிந்தியா குறிவைப்பதால் அவருக்கும் முதல்வர் கமல்நாத்துக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பனிப்போர் தங்களுக்கு சாதகமாக அமையும் என மத்திய பிரதேச பா.ஜ. கணக்கு போடுகிறது.

  மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. அதிக இடங்களை வென்ற போதும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ.வால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் அந்த கட்சியின் இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா. 

  கமல் நாத்

  காங்கிரஸ் வெற்றி பெற்றதும் ஜோதிராதித்யா சிந்தியாதான் முதல்வராக பதவியேற்பார் என பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத்தை முதல் பதவிக்கு தேர்வு செய்தார். ஜோதிராதித்யா சிந்தியாவை வேறுவிதமாக சமாதானம் செய்தார் ராகுல் காந்தி. இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியை எப்படியேனும் கைப்பற்ற வேண்டும் என சிந்தியா தீவிரமாக இருக்கிறார்.

  எங்க தலைவருக்கு மாநில கட்சி தலைவர் பதவி கொடுக்கவில்லை என்றால் ஒட்டு மொத்தமாக பதவி விலகுவோம் என சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஒரு புறம் கட்சி தலைமைக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி விட்டார்கள். இப்படியே விட்டால் சிக்கல் என்பதை உணர்ந்த கமல் நாத் இன்று டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது ம.பி. காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியம் என்று சோனியா காந்தியிடம் வலியுறுத்தியதாகவும், எனக்கும் சிந்தியாவுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  ஜோதிராதித்யா சிந்தியா

  தற்போது முதல்வர் கமல்நாத் வசம்தான் காங்கிரஸ் தலைவர் பதவி உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவிதான் கிடைக்கவில்லை மாநில தலைவர் பதவியாவது கிடைக்க வேண்டும் என்பதில் ஜோதிராதித்யா சிந்தியா உறுதியாக உள்ளார்.