மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம்

  0
  1
  teamindia

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நேர முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது

  -குமரன் குமணன்

  மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நேர முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

  இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது .சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  பெர்த் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு மூன்றாவது போட்டி தொடங்கியது.

  இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆஸ்திரேலிய அணியில் ஒரே மாற்றமாக, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் நீக்கபட்டு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார் .இந்திய அணியில் லோகேஷ் ராகுல், முரளி விஜய், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால் மற்றும் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

  ஹனுமா விஹாரி தொடக்க ஆட்டக்காராக களமிறங்க, அவருடன் இணைந்து களம் புகுந்தார் அறிமுக வீரர் மயங்க் அகர்வால். 1936-ஆம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு பேட்ஸ்மேன்களும் முதல் முறையாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரிய நிகழ்வு இதன் மூலம் நடந்தேறியது. இந்த அரிய ஜோடியின் ஆட்டமும் மிகச்சிறப்பாக இருந்தது.

  கடும் சவாலுக்கு மத்தியில் தாக்குப்பிடித்தார் விஹாரி. மற்றொரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ரன்களை திரட்டினார் அகர்வால். 18.5 ஓவர்கள் வரை இந்த கூட்டணி நீடித்து 40 ரன்கள் சேர்த்த நிலையில், 66 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி 8 ரன்களில் கம்மின்ஸ் வீசிய புவுன்சரில் சிக்கி ஃபிஞ்சிடம் கேட்ச் ஆனார்.

  இந்த ஜோடி 18.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஓரு இந்திய தொடக்க இணை ஜூலை 2011-ஆம் ஆண்டுக்கு பின் எதிர்கொண்ட அதிகபட்ச ஓவர்களாகும்.

  அடுத்து வந்த புஜாராவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகர்வால் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 161 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் வீசிய மற்றொரு பவுன்சரை பின்னோக்கி தள்ளும் முயற்சியில் பந்து கையுறையை உரசியது. அதை பாய்ந்து பிடித்தார் விக்கெட் கீப்பர் பெய்ன். அப்போது அணியின் ஸ்கோர் 54.5 ஓவர்களில் 123/2.

  பின்னர் களமிறங்கிய கோலியும், புஜாராவும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். இறுதி கட்டத்தில் கோலியை வீழ்த்த ஸ்டார்க் உருவாக்கி தந்த ஓரு தெளிவான வாய்ப்பையும் தவற விட்டார் டிம் பெய்ன். கையுறைக்குள் பட்ட பந்நை பிடிக்க தவறினார் அவர்.

  ஆட்ட நேர முடிவில் இந்தியா 89 ஓவர்களில 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 200 பந்துகளில் 68 ரன்களும், கோலி 107 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இருவரும் தலா 6 பவுண்டரிகள் அடித்துள்ளனர்.

  நிதான ஆட்டத்தின் மூலம் அமைந்திருக்கும் நல்ல அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் முனைப்புடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்வதை காண நாளை அதிகாலை 5 மணி வரை காத்திருக்க வேண்டும்.