முதலீட்டாளர்களை காப்பாற்றிய பங்கு வர்த்தகம்….ரூ.1.65 லட்சம் கோடி லாபம்……சென்செக்ஸ் 693 புள்ளிகள் உயர்ந்தது…

  0
  9
  பங்கு வர்த்தகம் ஏற்றம்

  இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 693 புள்ளிகள் உயர்ந்தது.

  அமெரிக்காவில் நிதி அமைப்பை நிலையாக வைத்திருக்க தன் சக்திக்கு முடிந்த என்ன நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என அந்நாட்டு மைய வங்கி (பெடரல் ரிசர்வ்) நேற்று இரவு அறிவித்தது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் எந்தவொரு அவசர தேவைகளையும் பூர்த்தி செய்ய நிதி பரிமாற்றத்தில் எந்ததாமதமும் இல்லை என்பதை உறுதி செய்ய நிதி அமைச்சகம் அரசாங்கத்தின் செலவு முறையை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவித்தது. இந்த தகவல்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

  அமெரிக்க பெடரல் ரிசர்வ்

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி இந்துஸ்தான் யூனிலீவர், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி, ஐ.டி.சி., பவர்கிரிட் மற்றும் எல் அண்டு டி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  இன்போசிஸ்

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 923 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,337 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 153 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.103.78 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.65 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

  மும்பை பங்குச் சந்தை

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 692.79 புள்ளிகள் உயர்ந்து 26,674.03 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 190.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7,801.05 புள்ளிகளில் முடிவுற்றது.