முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சி!

  0
  3
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

  கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக அமையாதது, இன்போசிஸ் மீது மற்றொரு புகார் எழுந்தது, இந்தியாவில் வோடாபோன் எதிர்காலம் கேள்விகுறியானது என அந்த குழும தலைமை செயல் அதிகாரி கூறியது, போன்ற எதிர்மறையான தகவல்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்குச் சந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அமையததால் பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது.

  டி.சி.எஸ்.

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ்பேங்க், ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, சன் பார்மா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  யெஸ் பேங்க்

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 958 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,613 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 167 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின்  மொத்த சந்தை மதிப்பு ரூ.152.27 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

  பங்கு வர்த்தகம் சரிவு

  இன்று பங்கு வர்த்தகத்தின் நிறைவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 229.02 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,116.06 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,840.45 புள்ளிகளில் முடிவுற்றது.