முகேஷ் அம்பானியின் மகுடத்தை சாய்த்த கொரோனா வைரஸ்…. ஆசியாவின் மெகா கோடீஸ்வரர் பட்டியலில் 2வது இடத்துக்கு சறுக்கல்

  0
  7
  முகேஷ் அம்பானி

  கொரோனா வைரஸால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பலத்த சரிவால் நேற்று முன்தினம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.42 ஆயிரம் கோடி குறைந்தது. இதனையடுத்து ஆசியாவின் மெகா கோடீஸ்வரர் என்ற பெருமையை அலிபாபா குரூப்பின் நிறுவனர் ஜாக் மாவிடம் இழந்தார்.

  சவுதி அரசு கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்தது, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இது போன்ற காரணங்களால் கடந்த திங்கட்கிழமையன்று இந்திய பங்குச் சந்தைகளில் இதுவரை இல்லாத மரண அடியை எதிர்கொண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. அன்று மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7 லட்சம் கோடியை இழந்தனர்.

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை அன்று 12 சதவீதத்துக்கு மேல் குறைந்தது. இதனால் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடி குறைந்தது. இதனால் ஆசியாவின் மிகப்பெரிய மெகா கோடீஸ்வரர் என்ற பெருமையை இழந்தார். தற்போதைய நிலவரப்படி முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு ரூ.3.09 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து ஆசியாவின் மெகா கோடீஸ்வரர் பட்டியலில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

  ஜாக் மா

  ஆசியாவின் மெகா கோடீஸ்வரர் என்ற பெருமையை அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா பெற்றுள்ளார். அவரின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.3.29 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 18வது இடத்துக்கு ஜாக் மா முன்னேறி உள்ளார். அதேசமயம் நம்ம அம்பானி 19வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.