மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.200 அபராதம்…. ஒடிசா அரசு எச்சரிக்கை..

  0
  2
  மாஸ்க் அணிந்து வெளியே வரும் மக்கள்

  ஒடிசாவில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் 3 முறைக்கு மேல் பிடிப்பட்டால் அதன் பிறகு ரூ.500 அபாரதம் வசூலிக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஒடிசா அரசு கடந்த சில தினங்களுக்கு முன் ஏப்ரல் 9ம் தேதி (நேற்று) காலை முதல் மாநிலத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவித்தது.

  ரூ.200 அபராதம்

  அதன்படி,நேற்று முதல் ஒடிசாவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பது நடைமுறைக்கு வந்தது. மக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் முதல் முறை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 தடவை மட்டுமே ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் மாஸ்க் அணியாமல் சிக்கினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில உத்தரவு பிறப்பித்துள்ளது.

  ஒடிசா அரசு முத்திரை

  மேலும் ஒடிசா அரசு தொற்று நோய்கள் (திருத்த) அவசர சட்டம் 2020ஐ கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி அரசின் உத்தரவு அல்லது விதிமுறைகளை மீறுபவர்களுக்கு  இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்த சட்டத்தின்கீழ் உள்ள ஒவ்வொரு குற்றமும் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகவும், ஜாமீன் பெறக்கூடியதாகவும் இருக்கும் என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.