மாமல்லபுரத்தில் மின்விளக்குகள் இல்லை.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…!

  0
  3
  Mahabalipuram

  மின்விளக்குகள் எல்லாம் நீக்கப்பட்டு இரவு நேரத்தில் இருள் சூழ காட்சியளித்த அர்ஜுனன் தபசு மற்றும் வெண்ணெய் பாறை உள்ளிட்ட இடங்களைக் கண்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர். 

  மாமல்லபுரம் வெகு நாட்களாகவே சுற்றுலாத் தலமாகத் தான் உள்ளது.சீன அதிபரே வந்து பார்வையிடும் படி அங்கு என்ன தான் உள்ளது என நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் பெருகி,  சீன அதிபர் மற்றும் நரேந்திர மோடியின் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்தைக் காண மக்களின் கூட்டம் அலை கடலெனத் திரண்ட வண்ணம் உள்ளன. 

  Mahabalipuram

  இரு நாடு அதிபர்களின் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சிற்ப வளாகங்களும் மின்விளக்குகள் பொருத்தப் பட்டு, திருவிழா காலம் போல அலங்கரிக்கப்பட்டு அற்புதமாகக் காட்சியளித்தன. இது நாள் வரை மாமல்லபுரத்தில் அத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. முதன் முதலாக மாமல்லபுரத்தை வண்ண விளக்குகளோடு இணையதளங்களில்  பார்த்த மக்கள் நேரில் காண வேண்டும் எனக் கடந்த இரண்டு நாட்களாக மாமல்லபுரத்தில் குவிகின்றனர். ஆனால், மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மின்விளக்குகள் எல்லாம் நீக்கப்பட்டு இரவு நேரத்தில் இருள் சூழ காட்சியளித்த அர்ஜுனன் தபசு மற்றும் வெண்ணெய் பாறை உள்ளிட்ட இடங்களைக் கண்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர். 

  Mahabalipuram

  இதனால், மின்விளக்குகளுடன் காட்சியளித்த மாமல்லபுரத்தைக் காண வெகு தொலைவிலிருந்து வந்து ஏமாற்றம் அடைந்ததாகவும், மாமல்லபுரத்தில் மின்விளக்குகள் நிரந்தரமாகப் பொருத்தப்பட வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய தொல்லியல் துறை அதிகாரிகள், மத்திய அரசு 9 மணி வரை சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட அனுமதித்த பின்னர், நிரந்தரமாக மின்விளக்குகள் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.