மலேசியாவில் சிக்கியவர்களை மீட்க உதவிய ஓ.பி.ரவீந்திரநாத் – சென்னை வந்த பயணிகள் நெகிழ்ச்சி!

  0
  20
  Raveendranath Kumar

  உங்களால்தான் நாங்கள் இன்று இங்கே இருக்கிறோம் என்று மலேசியாவிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகள் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நன்றி கூறியது நெஞ்சை நெகிழச் செய்தது.

  சென்னை: உங்களால்தான் நாங்கள் இன்று இங்கே இருக்கிறோம் என்று மலேசியாவிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகள் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நன்றி கூறியது நெஞ்சை நெகிழச் செய்தது.

  மலேசியாவில் படித்துக் கொண்டிருந்த, வேலைக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் நாடு திரும்ப கோலாலம்பூர் விமானநிலையம் வந்தனர். கொழும்பு வழியாக இந்தியாவுக்கு வர டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் குடிவரவு உள்ளிட்ட சோதனைகள் அனைத்தும் முடிந்து, விமானத்தில் ஏறிய நிலையில் கீழே இறக்கப்பட்டனர்.

  கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் இந்தியாவுக்கும் வர முடியவில்லை, எமிகிரேஷன் முடிந்துவிட்டதால் மலேசியாவுக்குள்ளும் போக முடியவில்லை. இதனால் செய்வதறியாது கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக அவதியுற்று வந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு உதவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக பிரபாகரன் என்பவர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

  இதைத் தொடர்ந்து தமிழக அரசின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் அவர்கள் அனைவரும் இந்தியா அழைத்துவரப்பட்டனர். 113 பேர் சென்னை விமானநிலையம் வந்து இறங்கினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு அறிகுறிகள் தென்படவே அவர்கள் சிறப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  தங்களை மீட்க உதவிய ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு பிரபாகரன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நாங்கள் எல்லாம் தற்போது இங்கே இருக்கக் காரணம் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்தான். எங்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுத்த அவருக்கு மனமார்ந்த நன்றிகள்” என்று கூறினார்.