மருத்துவ பணியாளர்கள் குழு மீது கல் வீசி தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கொரோனா உறுதி

  0
  2
  கல் வீச்சில் சேதமடைந்த ஆம்புலன்ஸ்

  உத்தர பிரதேசத்தில் மருத்துவ பணியாளர்கள் குழு மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 17 பேரில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

  உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத்தின் நவாபுரா பகுதியில் கடந்த 15ம் தேதியன்று கொரோனா வைரஸால் உயிர் இழந்தவரின் குடும்பத்தினரை அழைத்து சென்று தனிமைப்படுத்துவதற்காக மருத்துவ பணியாளர்கள் குழு ஒன்று ஆம்புலன்சில் அங்கு சென்றது. ஆம்புலன்ஸ் அந்த பகுதிக்கு சென்றதும் ஒரு கும்பல் ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது.

  கல் வீச்சில் சேதம் அடைந்த வாகனம்

  இந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் மற்றும் 3 மருத்துவ உதவியாளர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்ததோடு இது மன்னிக்க முடியாது என்றும் தெரிவித்தார். குற்றவாளிகள் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கைகள எதிர்கொள்வார்கள் என கூறினார்.

  உத்தர பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத்

  மருத்துவ பணியாளர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்கள் உள்பட 17 பேரை  போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தலைமை மருத்துவ அதிகாரி எம்.சி. கார்க் கூறுகையில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் தொடர்பில் இருந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் தனிமைப்படுத்துவார்கள் என  தெரிவித்தார்