மனிதாபிமானம் இல்லாத மோடி அரசு! – ப.சிதம்பரம் காட்டம்

  0
  5
  Provide money to poor families - P Chidambaram tweet

  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்த போதும் அதை மோடி அரசு கேட்க மறுக்கிறது. இப்படிப்பட்ட அரசை மனிதாபிமானம் இல்லாத அரசு என்றுதானே கருத வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

  கொரோனா பரவ தொடங்கிய நிலையிலேயே இந்தியா முழுக்க ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறிவந்தனர். குறிப்பாக ப.சிதம்பரம் தினமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதம், ட்வீட், பேட்டி அளித்துவந்தார். ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 

  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், ஏழைகள், நடுத்தர வருவாய் மக்களுக்கு உணவு மற்றும் பொருளாதார உதவிகள் அறிவிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்திவந்தார். ஆனால் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பு வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. மத்திய அரசு நிதி உதவியை அறிவித்துவிட்டு இன்னும் பலருக்கும் அளிக்காமல் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு நிறைவடையும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஊரடங்கு நீட்டிக்கப்படுவது பற்றி அரசுகள் பேசி வருகின்றன. இந்த நிலையில் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் மோடி அரசை மிகக் கடுமையாக சாடியுள்ளார்.

  அந்த பதிவில், “ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ வருமானமோ கிடையாது  அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.

  எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது. இதனைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்?” என்று கூறியுள்ளார்.