மத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவில் நுழையாது…. எந்தவொரு ஆப்ரேஷன் தாமரையும் வெற்றி பெறாது…. சிவ சேனா உறுதி….

  0
  3
  சஞ்சய் ரவுத்

  மத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவில் நுழையாது எந்தவொரு ஆப்ரேஷன் தாமரையும் இங்கு வெற்றி பெறாது என சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

  மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.களும் காங்கிரசிலிருந்து விலகியதால் அங்கு முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தற்போது கவிழும் நிலையில் உள்ளது. இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா பா.ஜ.க.தலைவர்  சந்திரகாந்த் பாட்டீல், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் மோதல்கள் காரணமாக அரசு கவிழும் என தெரிவித்து இருந்தார்.

  கமல் நாத்

  மத்திய பிரதேசத்தில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு மற்றும் சந்திரகாந்த் பாட்டீலின் கருத்து தொடர்பாக சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் செய்தியாளர்கள் கூறியதாவது: மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசுக்கு கவலை ஏற்பட எந்த காரணமும் இல்லை. மத்திய பிரதேச வைரஸ் இங்கு நுழையாது. நமது மாநிலத்தின் சக்தி வித்தியாசமானது. 100 நாட்களுக்கு முன்பே ஒரு ஆப்ரேஷன் தோல்வியுற்றது. ஆனால் மகா விகாஸ் அகாடி கூட்டணி மாநிலத்தை காப்பாற்றியது.

  பா.ஜ.க.

  மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத், அரசை நன்றாக கையாண்டு இருந்தால் இன்று சிக்கலான நிலையில் இருந்திருக்காது. முதல்வர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் இடையே நிலையான தொடர்பு உள்ளது. இந்த மாநிலத்தில் எந்தவொரு ஆப்ரேஷன் தாமரையும் வெற்றிபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.