மக்களை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வந்தால் அவர் எப்படி உயிருடன் இருக்க முடியும்… சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்கள் குறித்து உ.பி. முதல்வர்

  0
  7
  கலவரமாக மாறிய சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்

  ஒருவர் மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தால் அவர் எப்படி உயிருடன் இருக்க முடியும் என உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்கள் குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

  உத்தர பிரதேச சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை குறிவைத்து தாக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ஆசாதி (சுதந்திரம்) கோரும் முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

  யோகி ஆதித்யநாத்

  ஆசாதி என்றால் என்ன? ஜின்னாவின் கனவு அல்லது மகாத்மா காந்தியின் கனவை நோக்கி நாம் பணியாற்ற  வேண்டுமா? காவல்துறையினர் அவர்களது பணிக்காக பாராட்டப்பட வேண்டும். டிசம்பருக்கு பிறகு மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெறவில்லை. சட்டத்தை குறைத்துமதிப்பீடுபவர்களுக்கு அவர்களது மொழியில் பதில் கொடுக்கப்படும். நாங்கள் எந்தவொரு ஜனநாயக போராட்டங்களையும் ஆதரிப்போம் என நான் எப்போதும் சொல்கிறேன்.

  கலவரமாக மாறிய சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்

  ஆனால்  அமைதியான சூழ்நிலையை கெடுக்க ஜனநாயகத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசின் தோட்டாக்களால் யாரும் உயிர் இழக்கவில்லை. போராட்டத்தின்போது கலவரக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் பலர் உயிர் இழந்தனர். மக்களை கொல்லும் நோக்கத்துடன் யாராவது இது போன்ற போராட்டங்களுக்கு சென்றால் அவர்கள் இறந்து விடுவார்கள் அல்லது காவல்துறை பணியாளர்கள் இறந்துவிடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.