மக்களவை தேர்தல் 2019; திமுக கோட்டையில் களமிறங்கும் கமீலா நாசர்? போஸ்டர்களால் பரபரப்பு!

  0
  3
  கமீலா நாசர் (கோப்புப்படம்)

  மக்கள் நீதி மய்யம் கட்சியை சார்ந்த கமீலா நாசர் மத்திய சென்னை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியை சார்ந்த கமீலா நாசர் மத்திய சென்னை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழ் திரையுலகில் கோலோச்சிய கமல்ஹாசன், கடந்த ஆண்டு முதல் அரசியலில் இறங்கினார். கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவைகளை மதுரையில் பிரமாண்டமான விழாவில் அறிமுகம் செய்த அவர், தொடர்ச்சியாக பல ஊர்களுக்குச் சென்று களப்பணியாற்றி வருகிறார்.

  கிராமசபை கூட்டம், மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் கமல், எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் தனித்து களம் காணும் என அறிவித்துள்ளார்.

  இதையடுத்து, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களும் பெறபட்டு வந்தது. அந்த மனுவில் சாதி, மதம் பற்றியான எந்தக் கேள்விகளும் கேட்கப்படவில்லை, விருப்ப மனுத்தாக்கல் செய்பவர்களிடமும் சாதி, மதம் ஆகியவற்றைக் குறிப்பிடுவது அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் கடந்த சில நாட்களாக நேர்காணலையும் மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்தியது. மேலும், வருகிற 24-ம் தேதி கோவையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் எனவும் மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

  இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் “பேட்டரி டார்ச்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

  இந்நிலையில், திமுக-வின் கோட்டையான மத்திய சென்னை தொகுதியில் கமீலா நாசரை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், மத்திய சென்னையின் வெற்றி வேட்பாளர் கமீலா நாசர் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.

  kameela

  மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மனைவியான கமீலா நாசர். மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.

  வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் கமீலா போட்டியிட துறைமுகம் கட்சி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். இதே தொகுதியில் கமலஹாசன் போட்டியிட எழும்பூர் நிர்வாகிகள் சார்பாகவும் விருப்பமனு அளிக்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடி இடம்பெற்றிருக்கும் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

  தி.மு.க-வின் கோட்டை, மத்திய சென்னை தொகுதி. முரசொலி மாறன், தயாநிதி மாறன் எனத் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார்கள். வி.வி.ஐ.பி தொகுதியாக இருந்த மத்திய சென்னையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக அ.தி.மு.க வெற்றி பெற்றது. அக்கட்சியின் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி.,-யானார்.

  மத்திய சென்னை தொகுதிக்குள் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளதாலும், படித்தவர்கள், மத்திய தர வகுப்பினர் அதிகமாக உள்ளதாலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கணிப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி இருப்பதாக கூறப்படுகிறது.