மகாராஷ்டிராவில் லாக்டவுன் 31ம் தேதி வரை நீட்டிப்பு…. முதல்வராக உத்தவ் தாக்கரே தொடருவதில் சிக்கல் இல்லை

  0
  4
  முதல்வர் உத்தவ் தாக்கரே

  மகாராஷ்டிராவில் லாக்டவுனை 31ம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்ந்து பதவியில் இருப்பதில் இனி எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை.

  மகாராஷ்டிராவில் தொற்று நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 975 பேர் இந்த கொடிய தொற்று நோய்க்கு பலியாகி உள்ளனர். 3ம் கட்ட லாக்டவுன் வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடைய உள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் கூட்டணியின் தலைவர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

  ஊரடங்கு

  இந்த கூட்டத்தில் லாக்டவுனை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக மகாராஷ்டிரா அரசு முடிவெடுத்தது. சிகப்பு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் லாக்டவுன் விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்தவும், ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தவும் அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. லாக்டவுன் தொடர்பான தனது கருத்தை இன்றைக்குள் பிரதமர் அலுவலகத்துக்கு அம்மாநில அரசு அனுப்பும். இதற்கிடையே காலியாக உள்ள 9 மேலவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட்ட உத்தவ் தாக்கரே உள்பட 9 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து முதல்வர் உத்தவ தாக்கரே தொடர்ந்து பதவி நீடிப்பதில் இனி எந்த சட்ட சிக்கலும் இல்லை.

  மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள்

  முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அப்போது அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லை. அரசியல் சட்டத்தின்படி 6 மாதத்துக்குள் (மே 28) அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாகவோ பதவியேற்றால் மட்டுமே தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். 
  மேலவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக ஆகி விடலாம் என உத்தவ் தாக்கரே நினைத்து இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக மேலவை உறுப்பினர்கள் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

  கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி

  இதனையடுத்து மேலவை உறுப்பினர் நியமனத்தில் கவர்னருக்கான ஒதுக்கீட்டில் உத்தவ் தாக்கரேவை உறுப்பினராக நியமிக்க அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால் கவர்னர் அமைதியாக இருந்ததையடுத்து பிரதமர் மோடியிடம் இந்த விவகாரத்தை உத்தவ் தாக்கரே கொண்டு சென்றார். இதன் தொடர்ச்சியாக மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலை விரைவாக நடத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு கவர்னர் கடிதம் எழுதினார். இதனையடுத்து காலியாக உள்ள 9 மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து. உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று உத்தவ் தாக்கரே உள்பட 9 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தவ் தாக்கரே மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் முதல்வராக பதவி நீடிப்பதில் இனி எந்தவொரு சிக்கலும் இல்லை.