பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம்; மக்கள் நீதி மய்யம் பேரணி!

  17
  பேரணியாக சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது

  பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  அந்த வகையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஶ்ரீப்ரியா, சினேகன் தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் பேரணியாக சென்று பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தனர்.

  முன்னதாக, இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி ராஜேந்திரனை நேரில் சந்தித்து கமல்ஹாசன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.