பொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ!

  0
  16
  தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி கிருஷ்ணா

  கேரளா மாநிலம் திரிசூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணா எனும் மாணவிக்கு குதிரையில் சவாரி சென்று தேர்வெழுத வேண்டும் என்பதே ஆசை

  திருவனந்தபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத மாணவி ஒருவர் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

  நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், பள்ளியில் முதல் மாணவ/மாணவியாக வர வேண்டும், அல்லது கல்லூரியில் சீட் கிடைக்கவாவது மதிப்பெண்கள் பெற வேண்டும் என பல்வேறு ஆசைகள், கனவுகளுடன் மாணவர்கள் தங்களது பொதுத் தேர்வை எழுதுவர். ஆனால், கேரளா மாநிலம் திரிசூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணா எனும் மாணவிக்கு குதிரையில் சவாரி சென்று தேர்வெழுத வேண்டும் என்பதே ஆசை.

  krishna horse ride

  திரிசூர் மாவட்டம் மலாவை சேர்ந்த மாணவி கிருஷ்ணா, அங்குள்ள ஹோலி கிரேஸ் அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற்ற போது, தனது கடைசி தேர்வுக்கு குதிரையில் பயணம் செய்து, பள்ளிக்கு சென்று தேர்வெழுதியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஏராளமானோர் மாணவிக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

  krishna horse ride

  இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், பொதுத்தேர்வு எழுத குதிரையில் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையை நான் எனக்குள் வளர்த்து வந்தேன். தேர்வின் கடைசி நாளான்று, குதிரை சவாரியை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு சென்று தேர்வெழுதினேன். போக்குவரத்து உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இது சரியான யோசனை இல்லை என என்னிடம் ஏராளமானோர் கூறினர். ஆனால், எனக்கு நான் எடுத்த முடிவே சரியென பட்டது. நான் ஏழாம் வகுப்பு முதல் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த ஆண்டு கூட நான் பள்ளிக்கு குதிரையில் சென்றுள்ளேன் என்றார்.

  krishna horse ride

  கிருஷ்ணாவின் தந்தை அஜய் கலிண்டி, விஷ்ணு கோயிலில் பூசாரியாக உள்ளார். அவரது தாய் இந்து இல்லத்தரசியாக இருக்கிறார். தற்போது கிருஷ்ணாவிடம் இரண்டு குதிரைகள் உள்ளன. அவை இரண்டுமே நான் எனது மகளுக்கு அளித்த பரிசு என பெருமிதமாக கூறும் அஜய், கிருஷ்ணாவின் 11-வது வயதில் முதல் குதிரையை பரிசாக அளித்தேன். அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இரண்டாவது குதிரையை பரிசாக அளித்தேன். வீட்டில் குதிரைகள் வைத்திருப்பதில் அவள் ஆர்வமாக இருந்ததால், அதனை நான் பூர்த்தி செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

  ஆனாலும் தனது செல்லப்பிள்ளைக்கு மேற்கொண்டு குதிரைகள் வாங்கித் தரப்போவதில்லை எனவும் அஜய் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தங்களது வீட்டில் பசுமாடு மற்றும் காளை ஒன்றும் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், குதிரைகளுடன் சேர்த்து தற்போது எங்களது வீட்டில் ஏழு பேர் இருக்கிறோம். குதிரைக்கு தீவனம் போடுவதற்கு ஏராளமான செலவாகிறது. எனது வருமானத்தில் இருந்து விலங்குகளை நான் பராமரித்து வருகிறேன் என்கிறார்.

  தனது வீடியோவை வாட்ஸ் ஆஃப்-ல் ஒருவர் அனுப்பிய பிறகே அது வைரலாவது குறித்து தனது தெரிய வந்தது என கூறும் கிருஷ்ணா, இதற்கு முன்பு கூட நான் குதிரையில் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் இது போன்று அவை வைரலாக வில்லை. உள்ளூர் மக்கள் மற்றும் எனது பள்ளி நண்பர்கள் மட்டுமே ஆவலோடு பார்த்து வந்தனர். ஆனால், இந்த முறை எனது பயிற்சியாளர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விட்டனர் என தெரிவித்துள்ளார்.

  விளம்பரத்துக்காக இது செய்யப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கும் கிருஷ்ணாவின் தந்தை, விளம்பரத்துக்காக யாராவது அபாயத்தை கையில் எடுப்பார்களா என கேள்வி எழுப்புகிறார். அத்துடன், முக்கியமான பொதுத்தேர்வின் போது குதிரையில் செல்வது குறித்த ஆபாயங்களை நான் எனது மகளிடம் கூறினேன். ஆனால், அவள் மிகவும் தைரியசாலி. மற்றவர்கள் கூறுவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

  இதையும் வாசிங்க

  குற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை!