பொங்கல் வாழ்த்து அட்டை பரிமாறிய சந்தோஷங்கள்… மறைந்துபோன கொண்டாட்டம்!

  0
  4
  pongal-greeting-cards

  ஒரு காலத்தில் கிறிஸ்துமஸ் தொடங்கி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வரை புத்தகம், ஃபேன்ஸி ஸ்டோர் கடைகளில் க்ரீட்டிங்ஸ் கார்டு எனப்படும் வாழ்த்து அட்டை விற்பனை ஜோராக நடைபெறும். பாரம்பரிய காட்சிகள், கடவுளர் படங்கள், நடிகர்- நடிகைகள் படங்கள் என விதவிதமான வாழ்த்து அட்டைகள் கடைகளில் நிறைந்திருக்கும்.

  பொங்கல் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மறையும் நிலை உருவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
  ஒரு காலத்தில் கிறிஸ்துமஸ் தொடங்கி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வரை புத்தகம், ஃபேன்ஸி ஸ்டோர் கடைகளில் க்ரீட்டிங்ஸ் கார்டு எனப்படும் வாழ்த்து அட்டை விற்பனை ஜோராக நடைபெறும். பாரம்பரிய காட்சிகள், கடவுளர் படங்கள், நடிகர்- நடிகைகள் படங்கள் என விதவிதமான வாழ்த்து அட்டைகள் கடைகளில் நிறைந்திருக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நமக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்புவது ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும். வாழ்த்து அட்டை கிடைக்கப்பெற்றவர்கள் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறலாம். பதிலுக்கு அவர்கள் நமக்கு அனுப்பும் வாழ்த்து அட்டைக்காக காத்துக்கிடந்தது, கிடைத்த வாழ்த்து அட்டைகளை சேகரித்து வைத்து அது பற்றிய நினைவுகளை அசைபோடுவது எல்லாம் நம்மிடமிருந்து பறிபோய்விட்டது.

  greeting-cards

  என்றைக்கு எஸ்.எம்.எஸ் காலம் தொடங்கியதோ அப்போது இருந்து வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் குறையத் தொடங்கியது. இன்றைக்கு ஒரே மேசேஜை டைப் செய்து நம்முடைய மொபைல் காண்டக்ட் லிஸ்டில் உள்ள பெயர்களை செலக்ட் செய்தால், ஒரு சில விநாடிகளிலேயே வாழ்த்துக்கள் சென்று சேர்ந்துவிடுகின்றன. ஆனால், கடந்த காலத்திலிருந்த சந்தோஷம் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  வாழ்த்து அட்டை வாங்க கடை கடையாய் ஏறி இறங்கி, நமக்குப் பிடித்த வாழ்த்து அட்டையைத் தேர்ந்தெடுத்து, உள்ளே எழுதப்பட்டுள்ள வாசகங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்து, பிறகு அதில் நம்முடைய வாழ்த்தை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி போடும்போது நமக்கு வேண்டியவர்கள் பற்றிய நினைவு நம் மனதில் நிழலாடும். ஒரு விநாடி வாட்ஸ் அப் உள்ளிட்ட மெசேஜ்களில் அந்த சந்தோஷம் இருப்பது இல்லை.

  pongal-wish

  வாழ்த்து அட்டை தயாரிப்பதை பலரும் தொழிலாக செய்து வந்தனர். விதவிதமான அளவுகளில், தரத்தில் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுவந்தன. தயாரிப்பது, விற்பனை செய்வது, வாழ்த்து அட்டையை டெரிவரி செய்வது என்று பல ஆயிரம் பேர் இதை நம்பி இருந்தனர். இன்று வாழ்த்து அட்டைகள் தயாரிப்பு கிட்டத்தட்ட நிற்கும் நிலையில் உள்ளது. இதனால் இதை நம்பியிருந்த தொழிலாளர்கள் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. 
  நம்முடைய கடந்த கால சந்தோஷத்தை மீட்டெடுக்க வாழ்த்து அட்டை பழக்கத்துக்கு திரும்ப வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் மூலம் உறவு, நட்பு பலப்படும், அவர்களின் நினைவு அதிகமாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அச்சகத் தொழிலாளர்கள், சிறுகடை வியாபாரிகள் வாழ்வாதாரத்துக்கு இல்லை என்றாலும் நம்முடைய குடும்ப, சமூக உறவு மேம்பட இந்த நல்ல பழக்கத்தை மீண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். முயன்று பார்க்கலாமே!