பெர்த் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி; தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது ஆஸி.,

  0
  4
  australia

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது

  -குமரன் குமணன்

  பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது.

  இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இதையடுத்து, பெர்த் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 108.3 ஓவர்களில் 326 ரன்களும், 105.5 ஓவர்களில் இந்தியா 293 ரன்களும் எடுத்திருந்தன.  ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 93.5 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்ததை அடுத்து இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

  தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி நாளான இன்று தொடர்ந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சின் தாக்கம் உடனடியாக தொடங்கியது. ஸ்டார்க் வேகமாக வீசிய ஒரு பந்து, விஹாரியின் பேட்டை உரசி அப்படியே அவரது தொடையில் பட்டு மேலெழும்பி ஸ்கொயர் லெக் பகுதியில் நின்றிருந்த ஹாரிஸ் கையில் கேட்சானது. இப்படி துரதிர்ஷ்டவசமாக விஹாரி 28 (75)  ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 119/6.

  தவிர்க்க இயலாத சூழலில் அதிரடி காட்ட முயன்ற பண்ட் 61 பந்துகளில் 30 ரன்களுக்கு லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கடைசி மூன்று விக்கெட்டுகளாக உமேஷ் யாதவ் 23 பந்துகளில் 2 ரன்களுக்கு ஸ்டார்க் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்தும், இஷாந்த் ஷர்மா 5 பந்துகளில் ரன் எடுக்காமல் கம்மின்ஸ் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் ஆகியும் அவுட்டாகினர். பின்னர், பும்ரா 3 பந்துகளில் ரன் எடுக்காமல் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து மிக குறுகிய இடைவெளிகளில் ஆட்டமிழக்க, 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது.

  முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 3 என மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லியோன் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

  இந்த வெற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும் இரு காரணங்களுக்காக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஸ்மித், வார்னார் ஆகிய இருவரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை செய்யப்பட்ட பின்னர் பெற்றுள்ள முதல் வெற்றி. மற்றொன்று ஒரு தலைவராக டிம் பெய்னுக்கும், பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கருக்கும் இது முதல் வெற்றி.

  பிரதான சுழற்பந்து வீச்சாளரும் நம்பிக்கை அளிக்கக் கூடிய பேட்ஸ்மேனுமாகிய ஜடேஜாவை அணியில் சேர்க்காதது. முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை பெறாதது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை விரைவாக முடிவுக்கு கொண்டுவராதது என மூன்று மாபெரும் தவறுகளை இந்தியா செய்துள்ளது.

  இவற்றை தாண்டி எப்போதும் இருக்கும் கடைசி பேட்டிங் பிரச்னையும் தொடர்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்கும் முன், இந்த விஷயங்களை சரி செய்ய முற்பட்டால் தான் மீண்டும் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.