பெண் குரலில் மயங்கிய முரட்டு சிங்கிள்! – வழிப்பறி செய்யும் ‘புள்ளிங்கோ’ கும்பலிடம் சிக்கிய கதை

  12
  மாதிரிபடம்

  பெண் குரலில் பேசி முரட்டு சிங்கிள் ஒருவரை சென்னைக்கு வரவழைத்து அவரிடம் புள்ளிங்கோ கும்பல் வழிப்பறி செய்த சம்பவம் நடந்துள்ளது.

  சென்னை: பெண் குரலில் பேசி முரட்டு சிங்கிள் ஒருவரை சென்னைக்கு வரவழைத்து அவரிடம் புள்ளிங்கோ கும்பல் வழிப்பறி செய்த சம்பவம் நடந்துள்ளது.

  ஈரோடு சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற 36 வயது இளைஞருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அதனால் காதல் செய்யும் ஆர்வத்தில் பேஸ்புக்கில் பெண் ஐடி ஒன்றுக்கு நட்பு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதும் சண்முகசுந்தரம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். தினமும் அந்த பெண்ணுடன் பேஸ்புக்கில் சாட்டிங் செய்தார். அத்துடன் அந்த பெண் அனுப்பிய புகைப்படங்களை கண்டு அவரது அழகில் சண்முகசுந்தரம் மயங்கினார்.

  ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணின் செல்போன் நம்பரை பெற்று தொடர்பு கொண்டபோது, மயக்கும் குரலில் பேசிய அந்த பெண்ணின் வார்த்தைகளில் சொக்கிப் போனார். இதன் தொடர்ச்சியாக தினமும் மணிக்கணக்கில் அந்த பெண்ணுடன் சண்முகசுந்தரம் கடலை போட்டுள்ளார். இதன் நீட்சியாக அந்தப் பெண்ணை பார்க்க டிப்-டாப்பாக ஆடை அணிந்து சென்னைக்கு வந்தார். தான் வீட்டில் தனியாக இருப்பதாகக் கூறி அந்தப் பெண் கூறவே அந்த ஆர்வமும் அவருக்கு பற்றிக் கொண்டது.

  roberry

  இந்நிலையில், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டபோது கோயம்பேட்டில் இருந்து மாதவரம் பேருந்து நிலையத்துக்கு வரச் சொன்ன சண்முகசுந்தரத்தின் பேஸ்புக் காதலி, அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் அவரை தனியாக நிற்கச் சொல்லிவிட்டு விரைவில் வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு நடந்தது தான் உச்சக்கட்ட சம்பவம். அடுத்த சில நொடிகளில் சண்முகசுந்தரத்தை 5 பேர் கொண்ட புள்ளிங்கோ கும்பல் சுற்றி வளைத்தது. அவரை கத்திமுனையில் மிரட்டி 5 ஆயிரம் ரூபாய் பணம், தங்கசங்கிலி, மோதிரம், ஸ்மார்ட்போன் போன்றவற்றை பறித்துக் கொண்டனர். மேலும் சண்முகசுந்தரத்தின் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு மூன்று ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.

  மீதமிருந்த இருவர் சண்முக சுந்தரத்தை மடக்கி வைத்திருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசாரைக் கண்டு சண்முக சுந்தரம் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து சண்முக சுந்தரத்தை மீட்ட போலீசார் காவலுக்கு இருந்த இரண்டு பேரை கைது செய்தனர். ஆனால் பணம் எடுக்க சென்ற 3 பேரும் போலீசாரைக் கண்டதும் தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து வசமாக சிக்கிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பெண்களுடன் பழகும் ஆசையில் இருக்கும் நபர்களை பேஸ்புக்கில் கண்டறிந்து, அவர்களிடம் 17 வயது கொண்ட சிறுவனை பெண் குரலில் பேச வைத்து ஸ்கெட்ச் போட்டுள்ளனர். இவ்வாறு பேஸ்புக் மூலம் வழிப்பறி செய்யும் கும்பல் ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகின்றன.