பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை! சவுதி தகவலால் மோடி நிம்மதி

  0
  3
  கச்சா எண்ணெய் விலை நிலவரம்

  விமான தாக்குதல் நடந்த சவுதிய அராம்கோ ஆலையில் தற்போது 70 சதவீதம் உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கி விட்டன. இதனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியுள்ளது.

  கடந்த சனிக்கிழமையன்று உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதியின் அராம்கோ நிறுவனத்தின் 2 ஆலைகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் அந்த ஆலைகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக சவுதியின் 50 சதவீத எண்ணெய் உற்பத்தி குறைந்தது. இதனால் சர்வதேச சந்தையில் சப்ளை பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென ஏற்றம் கண்டது.

  சவுதி அராம்கோ நிறுவனம்

  இந்த தாக்குதலால் சவுதியின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பேரல் சரிந்தது. அதேசமயம் ஆலைகளில் நடந்த தாக்குதல்களை சரிசெய்யும் பணிகளில் அராம்கோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சவுதி அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது ஆலையில் 70 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. இன்னும் சில வாரங்களில் உற்பத்தி முற்றிலும் பழைய நிலைக்கு திரும்பி விடும் என தெரிவித்தார்.

  தாக்குதல் நடந்த அரோம்கோ ஆலை

  அராம்கோ ஆலையில் உற்பத்தி பணிகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது என்ற தகவல் வெளிவந்தவுடன் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியது. சவுதி அராம்கோ நிறுவனத்தின் உற்பத்தி இன்னும் சில வாரங்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்ற தகவல் மோடி அரசுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியுள்ளதால் நம்ம நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் உயரவாய்ப்பில்லை என தகவல்  வெளியாகியுள்ளது.