புலந்த்சர் கலவரம்: போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றவர் கைது

  0
  1
  subodhkumar

  புலந்த்சர் கலவரத்தின் போது போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  லக்னோ: புலந்த்சர் கலவரத்தின் போது போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சர் மாவட்டத்தில் உள்ள சயானா கிராமத்தில் பசுவதையைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங், வன்முறையாளர்ளால் கல்லால் அடித்தும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும் கொல்லப்பட்டார். பெரும் சர்ச்சைக்குள்ளான, மாட்டிறைச்சி உண்டார் என்ற வதந்தியால் அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக் விவகாரம் தொடர்பாக விசாரித்து வந்தவர் சுபோத் குமார் சிங் என்பது கவனிக்கத்தக்கது.

  இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், கலவரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.பி.சிங் தவறி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் கே.பி.சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

  இந்நிலையில், காவல்துறை அதிகாரி சுபோத் குமாரை சுட்டுக் கொன்றதாக பிரசாந்த் நட் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். டாக்ஸி ஓட்டுநரான இவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், கலவரம் தொடர்பாக தன்னை பிடித்து வைத்திருந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து, துப்பாக்கியை பறித்து அவரைச் சுட்டுக்கொன்றதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.