புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன் முட்டை மாஸ்தான் இன்னைக்கு ஊரெல்லாம் செம மாஸ்!

  0
  11
  புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன்

  பொடி மாஸ் தொடங்கி…சாதாமாஸ், பெப்பர்மாஸ், சிறுவெட்டு மாஸ், பெருவெட்டு மாஸ், நைஸ்மாஸ்,கோல்டன் மாஸ்,ஆனியன் மாஸ் என முட்டையில் மட்டுமே,ஏகப்பட்ட முட்டை மாஸ்கள் வந்துவிட்டன!

  பொடி மாஸ் தொடங்கி…சாதாமாஸ், பெப்பர்மாஸ், சிறுவெட்டு மாஸ், பெருவெட்டு மாஸ், நைஸ்மாஸ்,கோல்டன் மாஸ்,ஆனியன் மாஸ் என முட்டையில் மட்டுமே,ஏகப்பட்ட முட்டை மாஸ்கள் வந்துவிட்டன! முதன் முதலா இப்படியொரு ‘முட்டை மாஸ்’ஸை கண்டு பிடித்து இந்த சமூகத்துக்கு சமர்பணம் பண்ணினதே இந்த முத்துப்பிள்ளை கேண்ட்டீனில்தான்.

  கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக நடந்து வரும் இந்தக் கேண்ட்டீனை துவங்கியவர் பெயர்தான் முத்துப்பிள்ளை.1960-ல் புதுக்கோட்டை பழனியப்பா தியேட்டர் அருகில்தான் இந்தகடையை முதலில் அமைத்தார்.

  அது ஏன் கேண்ட்டீன்?அது புதுக்கோட்டை ஸ்டைல்.புதுக்கோட்டை நகரில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கேண்டீன்கள் இருக்கின்றன.வழக்கமான ஹோட்டல், உணவகம்,மெஸ் போன்ற பெயர்களை இங்கே பார்க்க முடியாது!

  புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன்

  அதேபோல் தமிழக்கத்தில் இருக்கும் எந்த அசைவ ஓட்டலிலும் ஒரு புதுக்கோட்டை மாஸ்ட்டராவது இருந்தே தீருவார்.அப்படித்தான் 50 வருடம் முன்பு,ஒரு குஜராத்தி லாரி டிரைவர் இரவு வெகு தாமதமாக வந்து சாப்பிட புரோட்டா கேட்டிருக்கிறார்.

  கடையில் புரோட்டா இருக்கிறது,அவித்த முட்டை இருக்கிறது,ஆனால் குழம்பு வகைகள் எல்லாமே காலி…கொஞ்சம் கறிக்குழம்பு மட்டும் இருக்கிறது;அது ஒரு ஆள் சாப்பிட போதாது…அப்போதுதான்,அன்றைய மாஸ்ட்டர் ராமனுக்கு அந்த ஐடியா தோன்றியது.

  புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன்

  கடகடவென ஒரு வெங்காயத்தை வெட்டி கடாயில் போட்டார்.பின்னாலேயே ஒரு தக்களியையும் வெட்டிப்போட்டு,இரண்டு மூன்று அவித்த முட்டைகளை வெட்டிப்போட்டு கொஞ்சம் உப்பும் மிளகாய்தூளும் சேர்த்து வதக்கினார்.அவை சுருள வதங்கியதும்,சட்டியில் மீதமிருந்த கறிக்குழம்பை அத்துடன் கலந்து ஒரு கொதிவந்ததும் அதை,புரோட்டாவுடன் அந்த அதிர்ஷ்டக்கார குஜராத்தி லாரிடிரைவருக்கு பரிமாறினார்.

  அசந்துபோன அந்த லாரி டிரைவர் மாஸ்டர் ராமனின் கை மனத்தையும் முத்துப்பிள்ளை கேண்டீன் புரோட்டா ருசியையும் பார்க்கிற லாரிகாரர்களிடம் எல்லாம் புகழ்ந்து தள்ள,இன்று தமிழகத்தில் முட்டை மாஸ்;ஒரு மாஸ் ஹீரோவாகிவிட்டது.

  முத்துப்பிள்ளை கேண்டீனில்,தரப்படும் கிரேவிகள் மொத்தம் ஆறுவகை-
  இட்லி,இடியப்பம்,தோசை புரோட்டா போன்ற டிஃபன் வகைகளுடன் அவர்கள் தரும் கிரேவிகளின் தரமும்,ருசியும் உங்களின் நாக்குக்கு ஒரு புதிய உலகையே காட்டும்.ஆறுவகையான கிரேவிகள் இருந்தாலும் முட்டை மாஸும் ,ஆட்டுக்கால் பாயாவும்தான் யாரும் அடித்துக்கொள்ள முடியாத ஹீரோக்கள்.

  புதுக்கோட்டை முத்துப்பிள்ளை கேன்டீன்

  1886-ல் ராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சிக்காலத்திலேயே புதுக்கோட்டை, டெல்ட்டா மாவட்டங்களையும் திருச்சியையும் இணைக்கும் சந்தையாக மாறிவிட்டதால், எப்போதும் லாரி போக்குவரத்து இருந்து கொண்டே இருக்குமாம்.அதனால்,இந்த முத்துப்பிள்ளை கேண்டீன்கூட அது துவங்கப்பட்ட காலத்தில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டு இருந்ததாம்.

  இப்போதும் மோசமில்லை,அதிகாலை 5 மணிக்கு திறந்தால் இரவு இரண்டுமணி வரை திறந்திருக்கிறது.அநேகமாக தமிழகத்திலேயே அதிக நேரம் திறந்திருக்கும் உணவகம் இதுவாகத்தான் இருக்கும்!