பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக வெடிக்கிறது – தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

  0
  4
  தேசியவாத காங்கிரஸ்

  பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் போலீசாரால் குடியுரிமை திட்ட சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க முடியாததால் அவை வன்முறையாக மாறுகிறது என தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

  குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் அந்த சட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதேசமயம் இந்த ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியது. இதனால் பல உயிர் இழப்புகள் மற்றும் பொதுசொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்கள் குறிப்பாக கர்நாடகா, உத்தரப் பிரதேசத்தில் அதிகளவில் நடந்தது.

  நவாப் மாலிக்

  பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக வெடிக்கிறது என தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறுகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மற்றும் டெல்லி போன்ற மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் போலீசாருக்கு அந்த போராட்டங்களை சமாளிக்க தெரியாததால் அது வன்முறையாக வெடிக்கிறது. இதுதான் உண்மை என தெரிவித்தார்.