பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா….. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்…

  0
  1
  சத்ருகன் சின்ஹா

  காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்பான தனது கவலைகளை காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹா ஒப்புக்கொண்டார் என பாகிஸ்தான் ஜனாதிபதி டிவிட் செய்துள்ளார். இது காங்கிரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

  பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் மியான் ஆசாத் அஹ்சன் தனது மகன் திருமணத்தில் பங்கேற்க வருமாறு சத்ருகன் சின்ஹாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதனையடுத்து லாகூரில் நடைபெறும் அந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் அங்கு சென்றார்.

  பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியை சந்தித்த சத்ருகன் சின்ஹா

  லாகூரில் கல்யாணத்துக்கு சென்ற சத்ருகன் சின்ஹா அங்கு கவர்னர் மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் அல்வியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் பேசிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி டிவிட்டரில், காஷ்மீர் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் தொடர்பான எனது கவலைகளை சத்ருகன் சின்ஹா ஒப்புக்கொண்டார் என பதிவு செய்துள்ளார்.

  பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த சித்து

  2018ல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, அந்நாட்டு ராணுவ தளபதி குவாமர் ஜாவத் பாஜ்வாவை கட்டிப்பிடித்து  பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா, பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து, காஷ்மீர் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.