பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய புள்ளிவிவரங்கள் இந்த வாரம் பங்குச் சந்தையின் போக்கினை முடிவு செய்யும்- நிபுணா்கள் முன்னறிவிப்பு…

  9
  பங்கு வர்த்தகம்

  கடந்த நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம், 2019 அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரம் போன்றவை இந்த வாரம் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

  கடந்த நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வரும் 12ம் தேதி வெளியிடுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் ரிசர்வ் வங்கி கடந்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில்லரை விலை பணவீக்கம் புள்ளவிவரம் வரும் அன்றுதான் கடந்த அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரமும் வெளிவருகிறது. சில்லரை விலை பணவீக்கம் மற்றும் தொழில்துறை குறித்த புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  தொழில்துறை உற்பத்தி

  நாடாளுமன்ற குளிர்கால தொடர் டிசம்பர் 13ம் தேதி நிறைவடைகிறது. இதனால் இந்த வாரம் தனிநபர் டேட்டா பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் டேட்டா பாதுகாப்பு மசோதா நிறைவேறினால் அது இன்டர்நெட் நிறுவனங்களை பாதிக்கும் என தெரிகிறது. எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடவடிக்கைகளும் பங்குச் சந்தையின் போக்கினை நிர்ணயம் செய்யும்.

  நாடாளுமன்றம்

  இதுதவிர, அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகம் நிலவரம், சில்லரை விலை பணவீக்கம் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.