படம் திட்டமிட்டப்படி வெளியாகும்! அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! ஹீரோ படக்குழு எச்சரிக்கை… 

  0
  4
  ஹீரோ

  சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ஹீரோ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸால் தயாரிக்கப்பட்டது என்றும், வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே. ஆர். நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

  ஹீரோ

  நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர். டி. ராஜா. இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 24ஏ. எம் ஸ்டுடியோஸ். இந்த 24ஏ. எம் ஸ்டுடியோஸ் தான் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படமான ஹீரோ படத்தை தயாரிக்கவிருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படம் கே.ஜி. ஆர் பிலிம்ஸ்க்கு கை மாறியது.  இந்நிலையில் 24 ஏ.எம் பிலிம்ஸ் நிறுவனம் டி.எஸ். ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் கடந்த 2018ம் ஆண்டு ரூ. 10 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், ஒப்பந்தபடி கடன் தொகை ரூ. 10 கோடியை 24 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்கவும் கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி 24ஏ. எம் ஸ்டுடியோஸ் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

  Hero

  இந்நிலையில் கே.ஜே.ஆர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  “ஹீரோ படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது என பதிவிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு. ஹீரோ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இந்த நபர்கள், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ஹீரோ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். ஹீரோ படத்தை முற்றிலுமாக கே.ஜே.ஆர் நிறுவனம் மட்டுமே தயாரித்துவருகிறது. எங்கள் திரைப்படம் தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை.

  இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம். இதுபோன்ற அவதூறுகளை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.