நிறுவன வரி படிப்படியாக குறைக்கப்படும்…. நிர்மலா சீதாராமன் தகவல்…

  0
  2
  நிர்மலா சீதாராமன்

  ரூ.400 கோடிக்கு அதிகமாக வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கான நிறுவன வரி படிப்படியாக 25 சதவீதமாக குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 2019-20ம் நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ரூ.400 கோடி வரை ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்தார். இதற்கு முன் 2018ல் அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ரூ.250 கோடி வரை ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 25 சதவீதமாக குறைத்து இருந்தார்.

  நிறுவன வரி

  டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் பேசுகையில் கூறியதாவது: ஒரு காலத்தில் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வேலை வாய்ப்பை வழங்குபவர்களாக இந்திய தொழில்முனைவோர் இருந்தனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவர்களால் நாம் பெருமை அடைகிறோம் மற்றும் நாம் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். 

  அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களை ஊக்கப்படுத்துதல், புரிந்து கொள்வதை நோக்கியே உள்ளது.

  நிறுவன வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக படிப்படியாக குறைக்கப்படும் என அருண் ஜெட்லி அறிவித்தார். தற்போது 0.7 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அதிகபட்ச நிறுவன வரி பிரிவில் உள்ளன. அவையும் வருங்காலத்தில் 25 சதவீத நிறுவன வரிக்குள் வந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

  மோடி

  பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவில் செல்வத்தை உருவாக்கும் தொழில்முனைவோருக்கு அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என உறுதி அளித்து இருந்தார். அதன் எதிரொலியாகத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு அமைந்துள்ளது.