நிர்மலா சீதாராமனின் அறிவிப்பால் களை கட்டிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்தது…

  0
  1
  நிர்மலா சீதாராமன்

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளால் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்தத்தில் சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்தது.

  பொருளாதார தேக்கநிலையை போக்கும் நோக்கில் பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வார வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார். அதன் தாக்கம் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது. மேலும், பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

  பங்கு வர்த்தகம்

  இந்த வாரம் 3 நாட்கள் வர்த்தகம் ஏற்றம் கண்டது. 2 நாட்கள் சரிவை சந்தித்தது. இருப்பினும், ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு லாபகரமான வாரமாக அமைந்தது.

  இந்த வார வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.98 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த 23ம் தேதி பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.92 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, கடந்த 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.06 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

  பங்கு வர்த்தகம்

  கடந்த 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 631.63 புள்ளிகள் உயர்ந்து 37,332.79 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 193.90 புள்ளிகள் அதிகரித்து 11,023.25 புள்ளிகளில் நிலை கொண்டது.