நிர்பயா வழக்கு! குற்றவாளி முகேஷ் சிங் ப்ளாக் வாரண்டை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு..

  0
  2
  முகேஷ் சிங்

  நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் நேற்று தூக்கு தண்டனை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றம் விதித்த ப்ளாக் வாரண்டை நீக்ககோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  கடந்த 2012ல் டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் காமவெறி பிடித்த நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்கமால் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தால் நாடே கொந்தளித்தது. மாணவியை பலாத்காரம் செய்ததாக ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

  மரண தண்டனை குற்றவாளிகள்

  குற்றம்சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையும் நீதிமன்றம் விதித்தது. மேலும், டெல்லி நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

  நிர்பயா தாயார்

  இதற்கிடையே குற்றவாளிகளுக்கான தண்டனையை விரைவாக நிறைவேற்ற உத்தரவிடக்கோரி நிர்பயாவின் தாயார் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்மாதம் 22ம் தேதி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். இந்நிலையில், தங்களது தண்டனை மறுசீராய்வுக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா தாக்கல் செய்தனர். ஆனால் மறுசீராய்வு மனுக்களை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வரும் 22ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்போவது உறுதியானது. 

  உச்ச நீதிமன்றம்

  இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் நேற்று தூக்கு தண்டனை ரத்துசெய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த ப்ளாக் வாரண்டை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் சிங் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ப்ளாக் வாரண்ட் என்பது குற்றவாளியை தூக்கிலிட அங்கீகரிக்கும் எழுத்து உத்தரவு.