நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது மீண்டும் தள்ளி போகுமோ? கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்….

    0
    1
    நிர்பயா  வழக்கு குற்றவாளிகள்

    நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங், தனது கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது மீண்டும் தள்ளி போகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தலைநகர்  டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது.

    குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

    நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். இருப்பினும், நீதிமன்றம் அவர்களது மனுக்களை நிராகரித்தது. மேலும் கடந்த 22ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம்  உத்தரவிட்டது இந்நிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தூக்கு தண்டனை ரத்துசெய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார். இதனையடுத்து பிப்ரவரி 1ம் தேதியன்று குற்றவாளிகள் 4 பேரையும்  தூக்கிலிட நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தது.

    குற்றவாளி முகேஷ் சிங்

    ஆனால் அன்றும் அவர்கள் தூக்கிலிடப்படுவார்களா என்பது சந்தேகம்தான் எழுந்துள்ளது. ஏனென்றால், தனது கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதித்துறை மறுஆய்வு செய்யும்படி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.