நாங்க சொன்னா சொன்னதுதான் உறுதி அளித்த சவுதி! முகேஷ் அம்பானி ஹேப்பி

  0
  1
  முகேஷ் அம்பானி

  இந்த மாதம் நாங்க சொன்னப்படி பெட்ரோலிய கச்சா எண்ணெய் சப்ளை செய்வோம் என சவுதி அராம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

  நம் நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அதிகளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக சவுதியின் அராம்கோ நிறுவனத்திடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

  தாக்குதல் நடந்த அராம்கோ ஆலை

  இந்நிலையில் கடந்த மாதம் சவுதியின் அராம்கோ நிறுவனத்தின் 2 உற்பத்தி ஆலைகளில் தீவிரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த ஆலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. இதன் விளைவாக சவுதியின் 50 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளையில் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ஆலைகளை விரைந்து சரிசெய்யும் பணிகளை அராம்கோ நிறுவனம் மேற்கொள்ள தொடங்கியது. மேலும், சில ஏற்றுமதி ஆர்டர்களை தள்ளிவைத்தது.

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

  சவுதியின் இந்த நடவடிக்கையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கான சப்ளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்தான கேள்விக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இமெயிலில் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய மற்றும் நம்பகமான சப்ளையராக அராம்கோ நிறுவனம் விளங்குகிறது. அக்டோபர் மாதத்துக்கு எங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் ரகங்கள் மற்றும் அளவுகளை சப்ளை செய்வதாக அராம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.