நடுவழியில் இணைப்பு கம்பி முறிந்ததால் பெட்டிகள் இல்லாமல் 10 கி.மீட்டர் தூரம் சென்ற ரயில் என்ஜின்…..

  23
  விசாகா எக்ஸ்பிரஸ் ரயில்

  ஆந்திராவில் நடுவழியில் விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைப்பு கம்பி துண்டானதால், ரயில் பெட்டிகளிலிருந்து பிரிந்து என்ஜின் மட்டும் 10 கி.மீட்டர் தூரம் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  ஒடிசா மாநிலம் புவனேஷ்வரிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம் போல் புவனேஷ்வரிலிருந்து செகந்திரபாத்துக்கு நோக்கி வந்த விசாகா எக்ஸ்பிரஸ், நேற்று ஆந்திரமாநிலம் கோதாவரி மாவட்டம் நர்சிபட்டிணம், துனி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது ரயில் என்ஜினையும் பெட்டிகளையும் இணைக்கும் இணைப்பு கம்பி உடைந்தது. 

  ரயில் என்ஜின்

  இதனால் ரயில் பெட்டிகளிலிருந்து பிரிந்த என்ஜின் மட்டும் தனியாக சென்றது. என்ஜின் மட்டும் தனியாக சென்றதை உணர்ந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் ரயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ரயில் என்ஜின் 10 கி.மீட்டர் தூரம் வந்து விட்டது. இதனையடுத்து டிரைவர் என்ஜினை மீண்டும் ரயில் பெட்டிகள் நிற்கும் பகுதிக்கு திரும்ப ஒட்டி சென்றார். 

  ரயில் பெட்டி

  பின்பு என்ஜினுடன் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரி  ஒருவர் கூறினார். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.