‘நடிகர் விஜய்-யின் பிகில் படத்தை புறக்கணியுங்கள்’ : பூ வியாபாரிகள் போர்க்கொடி!

  0
  1
  நடிகர் விஜய்

   விஜய்யின் இந்த பேச்சுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு திருச்சி பூ வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

  பூ வியாபாரிகளை இழிவுபடுத்தும்  வகையில் பேசிய விஜய்யின் பிகில்  படத்தைப் புறக்கணிக்குமாறு திருச்சி பூ வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. 

  bigil

  இதனிடையே கடந்த மாதம் 19ஆம் தேதி சென்னையில்  நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யின் பேச்சு வைரலானது.  ஆளுங்கட்சியை சாடிய விஜய் நிகழ்ச்சியில் கதை ஒன்று கூறினார். ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற திருக்குறளுடன் கதையை சொன்ன விஜய்,   பூ வியாபாரம் பூக்கடையில் வேலை செய்யும் ஒருவரை பட்டாசு கடையில் உட்கார வைத்தால் என்னவாகும் என்பதை  கூறினார். இந்த கதையின் மூலம் யாரை எங்க உட்கார வைக்கனுமோ அவங்கள அங்க தான் உட்கார வைக்கனும் என்று சொல்லி முடித்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

  bigil

  இந்நிலையில்  விஜய்யின் இந்த பேச்சுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு திருச்சி பூ வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜன் கூறும் போது,  ‘ பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது பூ வியாபாரிகளை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் செய்ய வைத்த போது அதில் தண்ணி தெளித்ததாக மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மாவட்டம் தோறும் தலா ஒரு லட்சம் பூ வியாபாரிகள் உள்ளனர். இதனால்  பூ வியாபாரிகள் மனம் புண்படும் வகையில் அவர் பேசியிருப்பது வியாபாரிகளை  வருத்தமடையச் செய்துள்ளது. அவரது பேச்சை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் மாவட்டம் தோறும் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும். பூ வியாபாரிகள் அனைவரும் திரைப்படத்தைப் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்’  என்றார். 

  bigil

  முன்னதாக பிகில் போஸ்டரில் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்புக் கால் வைத்து போஸ் கொடுத்ததற்குக் கோவையில் கறிக்கடை நடத்தும் சிலர் எதிர்ப்பு  தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை  கொடுத்தது குறிப்பிடத்தக்கது.