தொடர்ந்து 3வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது

  0
  1
  ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்

  தொடர்ந்து 3வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது.

  பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவித்து வருகின்றன. இதில் பல நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக உள்ளன. இதனால் அந்த நிறுவனங்கள் துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்குச் சந்தைகளுக்கு பாதகமாக இல்லாததால் இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது.

  யெஸ் பேங்க்

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி., எச்.டி.எப்.சி. யெஸ் பேங்க், டெக் மகிந்திரா மற்றும் சன்பார்மா உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஹீரோமோட்டோகார்ப், வேதாந்தா,ஏசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி., ஐ.டி.சி. மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,151 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,318 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 198 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.87 லட்சம் கோடியாக இருந்தது.

  பங்கு வர்த்தகம்

  இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 92.90 புள்ளிகள் உயர்ந்து 38,598.99 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 35.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,464.00 புள்ளிகளில் நிலை கொண்டது.