தொடர்ந்து 2வது நாளாக கரடியை வீழ்த்திய காளை! சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது

  0
  3
  தொடர் ஏற்றம்

  இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது.

  இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். மேலும் ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.2 சதவீதமாக சரிவு காணும் என எதிர்மறையான தகவல் வெளியானது இருப்பினும் அது பங்குச் சந்தைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

  சீனா

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், வேதாந்தா, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஓ.என்.ஜி.சி., மாருதி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டெக்மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  கோடக் மகிந்திரா வங்கி

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,107 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,360 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 190 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.87 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.82 லட்சம் கோடியாக இருந்தது.

  பங்கு வர்த்தகம்
  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 291.62 புள்ளிகள் உயர்ந்து 38,506.09 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 87.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,428.30 புள்ளிகளில் நிலை கொண்டது.