தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்த சோனியா காந்தி…. காரணம் தெரியாமல் தவித்த காங்கிரசார்

  0
  4
  சோனியா காந்தி

  மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனது கட்சி அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கடந்த ஓராண்டாக அவர் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கியே நிற்கிறார்.

  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி துறந்தார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை அந்தகட்சியின் காரிய கமிட்டி மேற்கொண்டது. இருப்பினும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இதனையடுத்து கட்சியின் இடைக்கால தலைவராக பதவியேற்கும்படி சோனியா காந்தியிடம் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  காங்கிரஸ்

  இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் டிசம்பரில் 73 வயதில் அடியெடுத்து வைக்கிறார். மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் சில தொகுதிகளில் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. 

  ராகுல் காந்தி

  சோனியா காந்தி இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையன்று மகேந்திரகார்க் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி  நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்ந்து போயினர். இருப்பினும், சோனியா காந்திக்கு பதிலாக ராகுல் காந்தி அந்த பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த ஒராண்டாக தேர்தல் பிரச்சாரத்தை விட்டு சோனியா காந்தி ஒதுங்கியே உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு அவர் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை.