தீர்ப்பு சாதகமாக வந்தாலும்….. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க குறைந்தபட்சம் 5 வருஷம் ஆகுமாம்…

  13
  கோயில் மாடல்

  அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்த போதிலும், ராமர் கோயில் கட்டி முடிக்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  70 ஆண்டுகளாக முடிவு தெரியாமல் இருந்த வந்த அயோத்தி நில உரிமை பிரச்னையில் உச்ச நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை. இந்து கோயிலின் கட்டமைப்பு மீதான கட்டப்பட்டுள்ளது. அதனால் சர்ச்சைக்குரிய நில உரிமை இந்துக்களுக்குதான் சொந்தம். மேலும் மசூதி கட்டுவதற்காக முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

  விஷ்வ இந்து பரிஷத்

  இதனையடுத்து ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகள் நீங்கியது. இருப்பினும் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி.) டிசைன் படி ராமர் கோயில் கட்டி முடிக்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் 250 கலைஞர்கள் இரவு பகலாக தொடர்ந்து உழைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் அனுபாய் சோம்புரா இது குறித்து கூறியதாவது:

  தயார் நிலையில் உள்ள கற்கள்

  1990 முதல் ராமர் கோயில் கட்டுவதற்காக கல் சிற்ப வேலைகளை வி.எச்.பி.யின் காரியாஷலாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் ராமர் கோயிலின் அடித்தளத்துக்கான கல் வேலைகளில் 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இவ்வளவு நாட்களும் சிற்ப கலைஞர்கள் தினமும் 8 மணி நேரம் பணியாற்றி 106 பில்லர்களை மட்டுமே தயார் செய்துள்ளனர். வி.எச்.பி. டிசைன்படி, மொத்தம் 212 பில்லர்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி வி.எச்.பி. காரியாஷலாவில் சிற்ப கலைஞர்கள் யாரும் இல்லை. மீண்டும் பணியை தொடங்கினால், நமக்கு குறைந்தபட்சம் 250 சிற்பகலைஞர்கள் தேவைப்படுவார்கள் மற்றும் கோயிலை உருவாக்க 5 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.