தீபாவளி செலவுக்கு பணம் கேட்டதால் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்!

  0
  3
  மனைவி மீது தீ வைத்த கணவன்

  புனேவில் தீபாவளி செலவுக்கு பணம் கேட்ட மனைவி மீது மண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

  மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் மஞ்ச்ரி புத்ருக் பகுதியில் உள்ள துபே காலனியில் ஆகாஷ் சஞ்சய் கஹாமனே என்பவர் தனது மனைவி பிரதிபா கஹாமனே மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வருகிறார். ஆகாஷ் சஞ்சய் தனது காரை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார். ஆகாஷ் சஞ்சய் குடும்ப செலவுக்கு மனைவியிடம் சரியாக பணம் கொடுப்பதில்லை என தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடப்பது வாடிக்கை.

  மனைவி மீது தீ வைத்த கணவன்

  இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று இரவு பிரதிபா தீபாவளி செலவுக்காக தனது கணவர் ஆகாஷ் சஞ்சயிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த ஆகாஷ் சஞ்சய் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து பிரதிபா மீது ஊற்றி தீ வைத்து விட்டார். ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு பிரதிபாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

   கைது

  மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது பிரதிபாவின் உடல் கிட்டத்தட்ட 60 சதவீதத்துக்கு மேல் தீயால் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், விசாரனை நடத்தியதில் ஆகாஷ் சஞ்சய் தனது மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளி ஆகாஷ் சஞ்சயை போலீசார் கைது செய்தனர்.