திருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கன் 2 தடவை ஸ்கேன் – புதிய உத்தரவு

  20
  tirupati

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும் என்று அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

  திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும் என்று அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

  திருப்பதி ஏழுமலையான் கோவிலின் லட்டு பிரசாதம் மிகவும் சுவையாக இருப்பதுடன், அது மிகவும் மதிப்புக்குரிய ஒன்றாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது. திருப்பதி சென்று வந்தவர்கள் அந்த லட்டு பிரசாதத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுப்பார்கள். ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுக்கப்படும் நெய்யில் இந்த லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. அதனால் திருப்பதி லட்டுக்கு சந்தையில் தனி மவுசு காணப்படுகிறது. சிலர் போலியாக லட்டு தயாரித்து அதை திருப்பதி லட்டு என்று விற்பனை செய்கிறார்கள். இன்னும் சிலர் நூதன முறையில் லட்டு பிரசாதத்தை பெற முயற்சிக்கிறார்கள்.

  ttn

  அதாவது வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இலவச லட்டுக்கான டோக்கனை வாங்குவோரில் சிலர் கோவிலுக்குள் செல்லாமலும், சாமி தரிசனம் செய்யாமலும் பாதியிலேயே வரிசையில் இருந்து வெளியேறி லட்டு கவுண்ட்டர்களில் டோக்கனை வழங்கி இலவச லட்டு பிரசாதத்தை வாங்கி செல்கிறார்கள். அப்படி வாங்கும் லட்டு பிரசாதத்தை சிலர் வெளி சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனால் தற்போது புதிய உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

  அதன்படி இனி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இலவச லட்டு பிரசாதத்துக்கான டோக்கன் வழங்கும்போது, அங்கேயே ஒரு முறை ஸ்கேன் செய்து பக்தர்கள் அனுப்பப்படுவார்கள். அடுத்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானைகேட் என்ற இடத்தில் பக்தர்கள் வரும்போது அதே லட்டு டோக்கனை 2-வது முறையாக ஸ்கேன் செய்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்தால் சாமி தரிசனம் செய்யாமல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து வெளியேறி யாரும் இலவச லட்டு பிரசாதத்தை வாங்க முடியாது. அதனால் இலவச லட்டு டோக்கனை வாங்கும் இடத்தில் ஒருமுறை ஸ்கேன் செய்த பக்தர்கள், அதே டோக்கனை மீண்டும் ஸ்கேன் செய்தே ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.