தமிழகத்தை உறைய வைத்த படுகொலை! ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி!!

  0
  3
   ராம்குமார் -சுவாதி

  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன

  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. கிட்டதட்ட 1000-க்கும் அதிகமான நாட்கள் கடந்து விட்ட நிலையில் தற்போதாவது சென்னை ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதா? பார்க்கலாம்…

  2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி. பணிக்கு செல்வதற்காக சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு அக்கம்பக்கத்தில் கிடைத்த வீடியோக்களை வைத்து ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தது காவல்துறை.  இதனையடுத்து ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள் சரி செய்யப்படும் என்றும், கேமரா இல்லாத இடங்களில் புதிதாக பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளும் நடைபெற்றன. இவையெல்லாம் ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டனவா? என்றால் அது கேள்விகுறியே…

  swathi murder

  செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் பொறியாளர் சுவாதியை அலுவலகம் செல்வதற்காக ரயில் நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டுத் திரும்பிச் சென்றார் அவரது தந்தை. அப்போது மணி காலை 6.30. பெண்கள் பெட்டி நிற்கும் இடத்திற்கு சென்று காத்திருந்த சுவாதியை நோக்கி வந்த அடையாளம் தெரியாத நபர், சுவாதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த சில நொடிகளிலேயே இளம்பெண் சுவாதியை தாம் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்குகிறார். ரத்த வெள்ளத்தில் சரிகிறார் சுவாதி. ஆங்காங்கே நின்றிருந்த பயணிகள் நடப்பதை அறிந்து விழிப்படையும் முன்னரே, படுகொலையை அரங்கேற்றிய நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து காணாமல் போய்விடுகிறார். அப்போது நேரம் காலை 6.38. எட்டே நிமிடங்களில் நடந்து முடிந்து விட்ட இந்த நடுங்க வைக்கும் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை தமிழக மக்கள்.

  swathi murder

  கொலை நடந்து முடிந்து இரண்டு மணி நேரம் கழித்த பிறகே சுவாதியின் உடலை ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் சம்பவம் குறித்த நேரடிக் காட்சிப் பதிவுகள் எதுவுமே இல்லை. ஆனால், ரயில்நிலையத்திற்கு வெளியே குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி வெளியிடப்பட்டது. இதில் ரயில்வே பார்டர் சாலையில் சந்தேகத்துக்கு உரிய வகையில் தோளில் பையுடன் ஒரு நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஜூன் 26ம் தேதி கிடைத்த மற்றொரு கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. முந்தைய சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த அதே நபரின் அடையாளங்கள் இதிலும் ஒத்துப்போயின. இதனை வெளியிட்ட ரயில்வே காவல்துறையினர், சுவாதியின் பெற்றோர், நண்பர்கள், அவரது முகநூல் நண்பர்கள் என விசாரணை வளையத்தை விரிவு படுத்தினர். தண்டவாளத்தின் அருகே கிடந்த அரிவாளையும் போலீசார் கைப்பற்றினர். ஜூன் 27ம் தேதி சுவாதி கொலை வழக்கு, ரயில்வே காவல்துறையிடம் இருந்து சென்னை பெருநகர காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

   

  ramkumar

  நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் தான் குற்றவாளி என கண்டுபிடித்த காவல்துறையினர் ஜூலை 2ஆம் தேதி இரவு 10 மணிக்கு அவரை கைது செய்தது. அப்போது, அவர் தற்கொலை முயன்றதாக காவல்துறை கூறினர்.  சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சிறையில், மின்சார கம்பியை கடித்தும், உடலில் செலுத்திக் கொண்டும் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நீண்ட இழுபறிக்கு பின், நீதிமன்ற உத்தரவை பெற்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, ராம்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது… ஒரு தலை காதல்… பெண்கள் மீது பழகாத கிராமத்து பையனின் அறியாமை… பகட்டு வாழ்க்கைக்கு ஆசை… இதுவே இரண்டு பேரின் உயிர்களை காவு வாங்கியது. 

  சுவாதி கொலை சில நாட்கள் பரபரப்புடன் மறந்து விடக்கூடியது அல்ல. இனி அதுபோல் ஒன்று நடக்காமல் தடுப்பதே பெண்களுக்கு செய்யும் நன்மையாக இருக்கும்.