டெல்லி கலவரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் 3 முறை சந்திப்பு….. கேரள சுற்றுப்பயணம் ரத்து…. திணறும் அமித் ஷா…

  0
  5
  அமித் ஷா

  டெல்லி கலவரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் 3வது முறையாக அமித் ஷா அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில், சிறப்பு போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா இன்று தனது கேரள பயணத்தை ரத்து செய்தார்.

  வடகிழக்கு டெல்லி பகுதிகளில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே கடந்த சில தினங்களாக மோதல் நிலவுகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று டெல்லிக்கு வந்தபோது, இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிர் இழந்துள்ளனர். சிறுவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

  டெல்லி கலவரம்

  இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் துணை நிலை கவர்னர் அனில் பாய்ஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போலீஸ் கமிஷனர் அமுல்யா பாட்நாயக், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பா.ஜ.க.வின் மனோஜ் திவாரி மற்றும் ராம்விர் பித்ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வடகிழக்கு டெல்லி நிலவரத்தை சமாளிக்க அரசியல் தாண்டி நடவடிக்கை எடுக்கும்படி அமித் ஷாவை அனைத்து தலைவர்களும் வலியுறுத்தினர்.

  டெல்லி சிறப்பு போலீஸ் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா

  இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்கள் கழித்து அதிகாரிகளுடன் அமித் ஷா சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் நேற்று டெல்லியின் சிறப்பு போலீஸ் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவும் கலந்து கொண்டார். வடகிழக்கு டெல்லி கலவரமாக பூமியாக மாறி உள்ளதால் அமித் ஷா தனது புதன்கிழமை (இன்று) கேரள சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். இதற்கிடையே, நேற்று நள்ளிரவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காவல்துறை துணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று வடகிழக்கு டெல்லி நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.